Thursday, September 11, 2014

Online thesis Status Tracking System (OSTS) @ Bharathidasan University

Online thesis Status Tracking System (OSTS) @ Bharathidasan University

குன்றென நிமிர்ந்து நில்! : இன்று பாரதியார் நினைவு நாள்


'சிதையா நெஞ்சு கொள்' எனும் சூத்திரமே பாரதியின் வாழ்க்கை நமக்கு வழங்கும் பாடம். வறுமையும் வெறுமையும் விடாது துரத்திய போதும் அஞ்சாமல் அக்கினிக்குஞ்சாய் வீறுகொண்டு எழுந்த மாகவிஞர் மகாகவி பாரதியார்.

பதினாறு வயதிற்குள் பாரதியைப் போல் வாழ்க்கைப் புயலை எதிர்கொண்டவர் யாரும் இருக்க முடியாது. வறுமை எனும் உளியால் செதுக்கப் பட்ட கலைச் சிற்பம் பாரதியார். நெருப்பாற்றில் நீந்திக்கொண்டும் அவரால் அழகியல் கவிதைகளைத் தரமுடிந்தது.

"நல்லதோர் வீணைசெய்தே- அதைநலங்கெடப் புழுதியிலெறிவதுண்டோ?சொல்லடி சிவசக்தி- எனைச்சுடர்மிகு மறிவுடன் படைத்துவிட்டாய்வல்லமை தாராயோ -இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி சிவசக்தி-நிலச்சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
பாரதியின் வாழ்நாட்கள் வறுமையில் கழிந்தன. ஆனாலும் பாரதியிடம் என்றும் எனக்கலக்கமில்லை. தன்னலம் பாராமல், மாநிலம் பயனுற மாகாளியிடம் வல்லமை கேட்கிறான் பாரதி.

தாயின் இறப்பு : பாரதி பிறந்து ஐந்தாமாண்டில் 1887ல் பாரதியின் தாய் லட்சுமி அம்மையார் காலமாகிறார். பாரதி தன் சுயசரிதையில் தன்தாயின் இறப்பை ஏக்கத்தோடு பதிவு செய்துள்ளார்.
"என்னை ஈன்று எனக்கு ஐந்து பிராயத்தில்ஏங்கவிட்டு விண் எய்திய தாய்'' பாட்டி பாகீரதி, தாய்வழிப்பாட்டனார் ராமசாமி ஐயரின் அன்பு பாரதியைச் செழுமைப்படுத்தின. பாரதிக்கு மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதற்கு ஆசை இருந்தாலும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லி வளர்த்ததைப் வருத்ததோடு பதிவு செய்துள்ளார். ஓடிவிளையாடு பாப்பா என்று குழந்தைகளுக்கு அறிவுரை சொன்ன பாரதி, ஓடியாடவில்லை.
இயற்கை விரும்பியாகிக் கவிதைகள் படைக்கும் பாரதியால் பள்ளிப்படிப்பை மனமொன்றிக் கற்கமுடியவில்லை. மூன்றுகாதல் என்ற தலைப்பில் சுதேசமித்திரன் இதழில் எழுதிய கவிதையின் தொடக்கத்தில் பள்ளிப்படிப்பு நாட்டமில்லாமல் போனதாக பாரதி குறிக்கிறார். ''பள்ளிப் படிப்பினிலே- மதிபற்றிட வில்லை'' என்ற வரி கவனத்திற்குரியது.
தமிழின் மீதும் தமிழ் இலக்கியங்கள் மீதும் தீராப்பற்று கொண்ட பாரதியால் ஆங்கிலக் கல்வியை ஏற்க முடியவில்லை. எட்டயபுரத்தில் இருந்து கல்வி பயில நெல்லை வந்ததால் செலவு அதிகம் ஆனது. தந்தையின் வறுமை அவரை அரித்தது. மனம் நிம்மதி இழந்து தவித்தது.பொருளில்லாக் கல்வியாய் பாரதிக்கு அக்கல்வி தெரிந்தது.

''செலவு தந்தைக்கு ஓர்ஆயிரம் சென்றது;
தீது எனக்குப் பல்ஆயிரம் சேர்ந்தன;
நலம்ஓர் எள்துணையும் கண்டிலேன் அதை
நாற்பதாயிரம் கோயிலில் சொல்லுவேன்!''
உதவி கேட்டு எழுதிய சீட்டுக்கவி

'பெரிதினும் பெரிது கேள்' என்று புதிய ஆத்திச்சூடி படைத்த பாரதி பள்ளிப்படிப்பிற்கு உதவிகேட்டு மன்னருக்குக் கடிதம் எழுதிய நிலையைக் காலம் ஏற்படுத்தியது.
தந்தையாரால் பள்ளிப்படிப்புக்குப் பணம் அனுப்ப முடியா நிலையில் பதினைந்து வயதேயான பள்ளிச் சிறுவன் பாரதி எட்டயபுர மன்னர் வெங்கடேஸ்வரருக்கு மிகத் துணிச்சலாக விண்ணப்பச் சீட்டுக்கவிதையை நேரடியாக அனுப்பி வைத்தான். திருநெல்வேலியில் பாரதியார் பள்ளிப்படிப்பை மேற்கொண்டபோது ஆசிரியர்களிடம் தமிழிலக்கியங்கள் குறித்த விவாதங்களை மேற்கொண்டார். புதுமையான சிந்தனைகளை முன்வைத்தார்.தோல்வியின் தோளில் ஏறி நின்றுகொண்டு வெற்றியின் வரலாற்றினை எழுதியவர். என்ன நடந்தாலும் பாரதியார் திருநெல்வேலி மண்ணில் தன் கல்வியை நிறுத்தவில்லை. காசி எனும் வேறுபகுதிக்குச் சென்றபோதும் வாய்ப்புகளைத் தனதாக்கிக் கொண்டார். அதனால் தான் திருநெல்வேலி ம.தி.தா., பள்ளியில் பாரதி பயின்ற வகுப்பறையில் வரலாறு இன்னும் வசித்துக்கொண்டிருக்கிறது.

தந்தையின் மரணம் : 1898 ஜூலை 20 ல் பாரதியின் வாழ்வில் புயல்அடித்த நாள். தந்தை மரணமடைகிறார். பள்ளிப்படிப்புத் தடைப்பட்டுவிடக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு பாட்டி பாகீரதி குடும்பச் சொத்தாக இருந்த எட்டயபுரம் வீட்டை இருநூறு ரூபாய்க்கு அடமானம் வைத்தார். படிப்பிற்காக வயதான காலத்திலும் வீட்டை அடமானம் வைத்து போராடிய பாரதியின் பாட்டியின் மனஉறுதியை என்ன சொல்வது? திருநெல்வேலி இந்துக் கலாசாலையில் பள்ளிப்படிப்பு முடித்ததைப்போல் காசியிலும் மத்திய இந்துக்கல்லூரியில் பாரதி முதல்வகுப்பில் தேறினார்.

தோல்வியிற் கலங்கேல் : பாரதி சிறுவயதில் நிறைய சவால்களை எதிர்கொண்டவர். பள்ளிப்படிப்பு நடக்கும்போதே ஏழு வயது செல்லம்மாவை மணம் செய்ய வைத்த குடும்பச்சூழலையும் திருநெல்வேலியில் இருந்தபோது தான் எதிர்கொண்டான். ஆனாலும் அவன் மனம் தளரா மாமனிதனாய் திகழ்ந்தான். ”நொந்தது சாகும்” என்று உணர்ந்த உத்தமன் பாரதி.
'மனதில் உறுதி வேண்டும்' என்ற வரிகள் பாரதி பட்ட அடிகளில் இருந்து பிறந்தது. ரசிக்கும் மனம் இருந்ததால் துன்பத்திலும் பாரதியால் உருக்குலையாமல் இருக்க முடிந்தது. பதினைந்து வயதில் தந்தையையும் இழந்து தனிமரமாய் நின்றார். அவர் தம் அவல நிலை குறித்துச் சுயசரிதையில்:

''தந்தைபோயினன் பாழ்மிடி சூழ்ந்தது;
தரணி மீதினில் அஞ்சல் என்பார் இலர்;
சிந்தையில்தெளிவு இல்லை; உடலினில்
திறனும்இல்லை; உரன்உளத்து இல்லையால்
எந்தமார்க்கமும் தோற்றிலது என் செய்கேன்?
ஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டிலே?''
இப்படி வருந்தினாலும் மனஉறுதியை கைவிடவில்லை பாரதி.


"தேடிச் சோறு நிதந் தின்று பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி மனம்
வாடித் துன்பமிக உழன்று பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின் மாயும் பல
வேடிக்கை மனிதரைப் போலே நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?''
என்றும் பாடினார்.
சிறு துன்பங்களுக்கும் விதியை
நொந்துகொள்கிற நமக்கு மகா கவி பாரதியின் வாழ்க்கை கற்றுத்தரும் பாடம் 'குன்றென நிமிர்ந்து நில்' என்பதுதான்.
​நன்றி: ​
​தினமலர்.​